நாடாளுமன்றத்தில் அதிகாரத்துடன் கூடிய குழுக்களின் ஊடாக நாட்டைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்க முடியுமெனவும் , அமைச்சு பதவிகளை பெற்று அதன் சுமையை மக்கள் மீது சுமத்தப்போவதில்லையெனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாட்டைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளுக்கு ஆதரவு - எதிரணி எடுத்துள்ள தீர்மானம்
21
views

நாடாளுமன்றத்தில் அதிகாரத்துடன் கூடிய குழுக்களின் ஊடாக நாட்டைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்க முடியுமெனவும் , அமைச்சு பதவிகளை பெற்று அதன் சுமையை மக்கள் மீது சுமத்தப்போவதில்லையெனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இலங்கையை தற்போதைய நிலையில் இருந்து மீட்பதற்காக நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி என்பன இணைந்து பொதுவான பயணத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக கொழும்பில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போது சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,

“நிலவும் சூழ்நிலையில் இருந்து நாட்டை மீட்பதற்காக நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி என்பன இணைந்து பொது பயணத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது.

அது சர்வகட்சி, ஒன்றிணைந்த நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டம். இதில் எவ்விதமான அமைச்சுப் பதவிகளையும் பகிர்ந்து கொள்வது போன்ற எந்த வகையான ஒப்பந்தங்களிலும் நாம் இணைய மாட்டோம்.

வழக்கமான அரசியல் கலாசாரத்தை மீண்டும் கொண்டு வந்து நாட்டின் 220 இலட்சம் மக்களை மீண்டும் துன்பத்திற்கு உள்ளாக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதிகாரமளிக்கப்பட்ட நிறைவேற்று நாடாளுமன்ற குழுக்கள் மீண்டும் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்பதோடு, அமைச்சு பதவிகளை பெற்று அதன் சுமையை மக்கள் மீது பாரப்படுத்த வேண்டிய அவசியமில்லை.

நாடாளுமன்றத்தில் அதிகாரத்துடன் கூடிய குழுக்களின் ஊடாக நாட்டைக் கட்டியெழுப்பும் நல்ல செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்க முடியும்.

கடந்த காலங்களைப் போன்று நப்பாசையிலான அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்ள கவனம் செலுத்தாமல், எமது நாட்டை வளமான நாடாக மாற்றுவதற்கான பொதுவான வேலைத்திட்டத்திற்கு ஆதரவை நல்குகிறோம்.

2019 அதிபர் தேர்தலில் மக்கள் எடுத்த தவறான முடிவினால் ஒரு தோல்வியுற்ற ஆட்சியாளர் ஆட்சிப்பொறுப்புக்கு வந்தார். அவரது பலவீனமான ஆட்சியினால் முழு நாடும் அநாதரவாக மாறியுள்ளது.

2019 டிசம்பரில் நாடு இருந்த நிலைக்கு நாட்டை மீண்டும் கொண்டு வர 5 ஆண்டுகளுக்கும் மேல் ஆகும். 2 மாதங்கள், 3 மாதங்களில் நாட்டை கட்டியெழுப்புவோம் என்ற கனவுக் கதைகளுக்கு ஏமாற வேண்டாம்.

அவ்வாறு கூறுவது பொய்யானது . இந்தப் பொய்க்கு இடமளிக்கக் கூடாது. எமது பிள்ளைகளின் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டும்” என்றார்.

YOUR REACTION?

Facebook Conversations